4488. | ' ''அல்லி ஊன்றிடும்'' என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம்பொன் வல்லிமூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும் மார - வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும், தோற்ற மெய்ம்மை சொல்லி ஊன்றிய ஆம், வெற்றி வரை எனத் தோன்றும் அன்றே! |
அல்லி ஊன்றிடும் என்று - அகவிதழ்கள் பதிந்து உறுத்துமென்று; அஞ்சி - அச்சங்கொண்டு; அரவிந்தம் துறந்தாட்கு - தாமரையை விட்டு நீங்கிவந்த திருமகளாகிய சீதைக்கு; கோல வயிற்றில் - அழகிய வயிற்றினிடத்தில்; அம்பொன் வல்லி மூன்று உள - அழகிய பொன் னிறமான கொடியின் வடிவமாகிய மூன்று மடிப்புக்கள் உள்ளன; அவையும் - அந்த மடிப்புகளும்; மார வில்லி - மன்மதனாகிய வில் வீரன்; மூன்று உலகினும் வாழும் மாதர் - மூன்றுலகங்களிலும் வசிக்கும் பெண்களெல்லாம்; தோற்ற மெய்ம்மை - (இச் சீதையின் அழகுக்குத்) தோற்றுப்போன உண்மைச் செய்தியை; சொல்லி - எடுத்துச் சொல்லி; ஊன்றிய ஆம் - நிலைநிறுத்தனவாகிய; வெற்றி வரை என - வெற்றிக்கு அடையாளமாகத் தீட்டிய இரேகைபோல; தோன்றும் - விளங்கும். ஆல், மற்று, அன்று, ஏ: அசைகள். திருமகள் தாமரையைத் துறந்ததற்கு அல்லி யூன்றலைக் காரணமாகக் கற்பித்தது ஏதுத்தற்குறிப்பேற்றவணி. சீதையின் வயிற்று மடிப்புகளை வெற்றியின் அறிகுறிக் கோடுகளாகக் கூறியது தன்மைத் தற்குறிப்பேற்றம். சீதையின் வயிற்றிலுள்ள மூன்று மடிப்புகளை மூவலகிலுள்ள எல்லா மகளிரையும் வென்றதற்கு அறிகுறியாக மன்மதன் நாட்டி வைத்த மூன்று இரேகையாகக் குறித்தான்என்பது. 42 |