4489.'செப்பு என்பென்; கலசம் என்பென்;
      செவ் இளநீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள் சூது என்பென்;
      சொல்லுவென் தும்பிக் கொம்பை;
தப்பு இன்றிப் பகலின்
      வந்த சக்கரவாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;
      பல நினைந்து உலைவென், இன்னும்.

     செப்பு என்பென் - (சீதையின் முலை) இரத்தினச் சிமிழ் என்று
கூறுவேன்; கலசம் என்பென்- (பொற்) கும்பம் என்று கூறுவேன்; செவ்
இளநீரும் தேர்வென் -
செவ்விளநீர் என்று ஆராய்வேன்; துப்பு ஒன்று
திரள் சூது என்பென் -
பவழத்தில் கடைந்து செய்யப்பட்ட
சொக்கட்டான் காயென்று கூறுவேன்; தும்பிக் கொம்பைச் சொல்லுவென் -
யானையின் தந்தங்களைச் சொல்வேன்; தப்பு இன்றிப் பகலில் வந்த -
தவறாமல் பகற்காலத்தில் வெளிப்பட்டுவந்த; சக்கரவாகம் என்பென் -
சக்கரவாகமென்று கூறுவேன்; ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் -
(என்றாலும் சீதையின் முலைகளுக்கு ஏற்ற) உவமைப் பொருள் ஒன்றையும்
அறியாத நான்; பல நினைந்து - (இவ்வாறு) பலவாறாக நினைந்து (அவற்றும்
எதுவும் ஏற்ற உவமைப் பொருளாகாமையால்); இன்னும் உலைவென் -
இன்னமும் வருந்துவேன்.

     சக்கரவாகம்: சூரியக் கதிர்களையருந்தும் இயல்புடைய இணைபிரியாப்
பறவை.  இராமன் 'ஒப்பொன்றும் காணேன்' என்றமையால் அவற்றிற்கு
அவையே ஒப்பு என்று கருதினான் என்பது -பொதுநீங்குவமையணி.    43