4490. | 'கரும்பு கண்டாலும், மாலைக் காம்பு கண்டாலும், ஆலி அரும்புகண், தாரை சோர அழுங்குவேன்; அறிவது உண்டோ? கரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து, உவமை சொல்ல, இரும்பு கண்டனைய நெஞ்சம், எனக்கு இல்லை; இசைப்பது என்னோ? |
கரும்பு கண்டாலும் - கரும்பைக் கண்ட பொழுதும்; மாலைக் காம்பு கண்டாலும் - வரிசையாகவுள்ள மூங்கிலைக் கண்ட போதும்; கண் அரும்பு - கண்களிலிருந்து; ஆலி தாரை சோர அழுங்குவேன் - மழைத் துளிபோன்ற நீர் தாரையாகப் பெருக மனம் வருந்துவேன்; அறிவது உண்டோ - (இவ்வாறு வருந்துவதல்லாமல்) (அவள் தோள்களுக்கு இணையாக ஏற்ற உவமையைத்) தேர்ந்து அறிதல் உண்டோ? (இல்லை); சுரும்பு கண்டு ஆலும் - வண்டுகள் கண்டு மொய்த்து ஒலிப்பதற்கு இடமான; கோதை தோள் நினைந்து - மாலையைத் தரித்த சீதையின் தோள்களை நினைத்து; உவமை சொல்ல - உவமை சொல்வதற்கு; இரும்பு கண்டனைய நெஞ்சம் - இரும்பு போன்ற வலிய மனம்; எனக்கு இல்லை - எனக்கு இல்லையே; இசைப்பது என்னோ- (நான்) உவமை கூறுவது எவ்வாறு? ஓ - வினாப் பொருளில் வந்தது. சீதையைப் பிரிந்துள்ள இந்த நிலையில் கரும்பையும் மூங்கிலையும் காண நேரும்போதெல்லாம் சீதையின் தோள்கள் நினைவுக்குவரக் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருக வருந்துவேன்; மிக மெல்லிய அச்சீதையின் தோள்களுக்குக் கடினமான கரும்பையும் மூங்கிலையும் உவமை கூற முடிந்ததே தவிர இன்னும் பொருத்தமான உவமை கூற இரும்புபோன்ற வன்னெஞ்சம் தனக்கு இல்லையே என்று இராமன் கூறினான். கரும்பும் மூங்கிலும்: வடிவமும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி அழகிய மகளிர் தோளுக்கு உவமையாயின. கோதை - ஆகுபெயர். ஒப்புடைய பொருள்களைக் கண்டு, பிரிந்தவர் வருந்துவது இயல்பாதலின் 'கண்தாரை சோர அழுங்குவேன்' என்று இராமன் வருந்தினான். 44 |