4491.'  ''முன்கையே ஒப்பது ஒன்றும்
      உண்டு, மூன்று உலகத்துள்ளும்''
என்கையே இழுக்கம் அன்றே?
      இயம்பினும், காந்தள் என்றல்,
வன் கை; யாழ் மணிக்கை என்றல்,
      மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி,
நன்கையாள் தடக்கைக்கு ஆமோ?
      நலத்தின்மேல் நலம் உண்டாமோ?

     மூன்று உலகத்துள்ளும் - மூவுலகங்களிலும்; முன் கை ஒப்பது -
(சீதையின்) முன்னங்கையைப் போன்றதாகிய; ஒன்றும் உண்டு என் கையே -
ஒரு பொருள் உண்டு என்று புகல்வதே; இழுக்கம் அன்றே - குறைவல்லவா?
இயம்பினும் -
(ஒருகால்) உவமை கூறினாலும்; மணிக்கை - (அவளுடைய)
அழகிய முன் கைகளை; காந்தள் என்றல் - காந்தள் மலரென்று கூறுதல்;
வன்கை -
கொடுமையானது; யாழ் என்றல் - மகரயாழென்று கூறுதல்; மற்று
ஒன்றை உணர்த்தல் -
வேறொன்றை அறிவுறுத்துவதாகும்; அன்றி -
அவ்வாறு அல்லாமல்; நன்கையாள் தடக்கைக்கு ஆமோ - (அக் காந்தளும்
யாழும்) சீதையின் அழகிய அகன்ற முன்கைகளுக்கு உவமை ஆகுமோ?
(ஆகா); நலத்தின் மேல் நலம் உண்டாமோ - அழகுக்கு மேலான வேறோர்
அழகு உண்டோ?

     சீதையின் முன்கைகளுக்கு உவமையாகப் பேசுவதற்குரிய பொருள்
மூவுலகிலும் ஏதேனுமுண்டு என்று சொல்வதற்கு இடமில்லை; ஒருகால் காந்தள்
மலரை எடுத்துக் கூறினால் அது அக் கைகளைவிட வன்மையுள்ளதாகையால்;
சொல்லுகின்றவர் மனம் கொடுமையானது என்பது புலனாகும்; அல்லாமல்,
மகரயாழை எடுத்துக் கூறினால் அது ஒரு வகையிலும் ஒப்பாகாமையால்
பொருத்தமில்லாத வேறொன்றை எடுத்துக் கூறியதாகும்; ஆகவே, இந்த இரு
பொருள்களும் சீதையின் முன் கைக்கு ஒப்பாகமாட்டா; இவ்வாறு அவள்
முன்கை உவமையற்றிருப்பதற்குக் காரணம் காந்தள், யாழ் முதலிய உவமைப்
பொருள்களுக்கெல்லாம் தாமே உவமையாகுமாறு அம் முன்கைகள்
அழகுமிக்குடையனவாகவிருப்பதால் என்க. அவற்றைக் காட்டிலும் சிறந்த
வேறொரு உவமைப் பொருள் இல்லை என்பதாம்.  சிறப்புப் பொருளைப்
பொதுப்பொருள் விளக்கி நிற்பதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாம்.
காந்தள் - ஆகுபெயர்; இது பெண்களின் கைக்கு வடி விலும், நிறத்திலும்,
மென்மையிலும், அழகிலும் உவமமாகும்.  ஓ - இரண்டும் வினா; ஏ - அசை.
                                                           45