4492. | ' ''ஏலக் கோடு ஈன்ற பிண்டி இளந் தளிர் கிடக்க; யாணர்க் கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென் பூ, நூல் ஒக்கும் மருங்குலாள்தன் நூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? |
பிண்டி ஏலக்கோடு - அசோகமரத்தின் மணமுள்ள கிளைகள்; ஈன்ற இளந்தளிர் கிடக்க - தோற்றுவித்த இளந்தளிர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; யாணர்க் கோலக் கற்பகத்தின் காமா குழை - புதிய அழகுள்ள கற்பக மரத்தின் விரும்பத் தக்க தளிர்களும்; கமலம் நறு மென்பூ - தாமரைக் கொடியில் தோன்றுகின்ற மெல்லிய மலர்களும்; நூல் ஒக்கும் மருங்குலாள்தன் - நூலைப் போல நுட்பமான இடையையுடைய சீதையின்; நூபுரம் புலம்பும் கோலக் காலுக்கும் - சிலம்புகள் ஒலிக்கும் அழகிய கால்களுக்கே; தொலையும் என்றால் - தோற்றப் போகுமென்றால்; கைக்கு ஒப்பு வைக்கலாமோ - (அவற்றைக்) கைகளுக்கு உவமை கூறுதல் பொருந்துமோ? ஓ - வினா. கற்பகத்தளிரும், தாமரை மலரும் சீதையின் தாழ்ந்த உறுப்பாகிய கால்களுக்கே இணையாகாமல் தோற்றனவென்றால் மேலான உறுப்பாகிய கைகளுககு ஒப்பாகமல் அவை தோற்குமெனச் சொல்லவும் வேண்டுமோ? சொல்லவே தேவையில்லை என்பது. 46 |