4493. | 'வெள்ளிய முறுவல், செவ் வாய், விளங்கு இழை, இளம் பொற் கொம்பின் வள் உகிர்க்கு, உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ? ''எள்ளுதில் நீரே மூக்கை'' என்று கொண்டு, இவறி, என்றும், கிள்ளைகள், முருக்கின் பூவைக் கிழிக்குமேல், உரைக்கலாமோ? |
வெள்ளிய முறுவல் - வெண்மையான பற்களையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்; விளங்கு இழை - ஒளி விடுகின்ற அணிகலன் களையுமுடைய; இளம் பொன் கொம்பின் - இளமையான அழகிய பூங்கொம்பு போன்ற சீதையின்; வள் உகிர்க்கு - கூர்மைமான நகங்களுக்கு; உவமை - உவமையாகக் கூடிய பொருள்களை; நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ - நம்மைப் போன்றவர்களால் மயக்கமில் லாமல் (தெளிவாக) எடுத்துக்கூற இயலுமோ? (இயலாது); கிள்ளைகள் - கிளிகள்; நீரே மூக்கை எள்ளுதிர் - (கல்யாண முருங்கைக் மலர்களைப் பார்த்து) நீங்கள் எமது மூக்கை (சீதையின் கைந்நகங்களுக்குப் பொருந்தாமை குறித்து) இகழ்கின்றீர்கள்; என்று கொண்டு - என்று மனத்தில் கொண்டு; இவறி - (அவற்றின்மேல்) கோபங்கொண்டு; முருக்கின் பூவை - அந்தக் கல்யாண முருங்கை மலர்களை (தம்மைப் பழிக்கும் மகளிர் வாயென்றே மயங்கி); எனறும் கிழிக்குமேல் - எப் பொழுதும் கிழிக்குமானால்; உரைக்கலாமோ - (கிளியின் மூக்கைச் சீதையின் கைந்நகங்களுக்கு உவமையாக) எடுத்துச் சொல்லலாமோ? கல்யாண முருக்க மலரை மகளிர் வாய்க்கு உவமையாகக் கூறுதல் மரபு. கிளிகள் முருக்கமலரைத் தமது அலகால் இயல்பாகக் கோதும்; இத்தன்மைகளைக் கொண்டு தமது மூக்கைச் சீதையின் கைந்நகங்களுக்கு ஒப்பாகாது என்று பழிக்கும் பெண்களின் வாயென்று முருக்க மலரைக் கருதிக் கிளிகள் அவற்றிடம் கோபங் கொண்டு அவற்றைக் கோதிக் கிழிக்கின்றன என்றான். வெள்ளிய முறுவல் செவ்வாய்: முரண்தொடை. இவறுதல்: பொறாமையயால் சினங்கொள்ளுதல். இச்செய்யுளில் மயக்கவணியை அங்கமாகக் கொண்ட ஏதுத் தற்குறிப்பேற்றவணியும் எதிர்நிலையணியும் அமைந்துள்ளன. 47 |