4501. | 'கேள் ஒக்கும் அன்றி, ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே; கோள் ஒக்கும்என்னின் அல்லால், குறி ஒக்கக் கூறாலாமே? வாள் ஒக்கும் வடிக் கணாள்தன் புருவத்துக்கு உவமை வைக்கின், தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அனங்க சாபம். |
வாள் ஒக்கும் - வாள் போன்ற; வடிக் கணாள்தன் புருவத்துக்கு - கூர்மையான விழிகளையுடைய சீதையின் புருவங்களுக்கு; உவமை வைக்கின் - உவமையெடுத்துப் பொருந்திப் பார்த்தால்; கேள் ஒக்கும் அன்றி - உறவாக அமைந்த அவை தாங்களே ஒன்றுக் கொன்ற உவ மையாகுமே அல்லாமல்; ஒன்று - வேறொரு பொருளை; கிளத்தினால் - உவமையாகக் கூறினால்; கீழ்மைத்து ஆம் - இழிந்த உவமையேயாகும் (மற்றும்); கோள் ஒக்கும் என்னின் அல்லால் - (பொதுவாகப் பெண்களின் புருவத்திற்கு உவமையாகும் பொருளையெடுத்துத் தன்) மனப் போக்கிற்குப் பொருந்தியுள்ளது என்று (சீதையின் புருவங்களுக்கு) உவமானமாகக் கூறினால் கூறலாமேயல்லாமல்; குறி ஒக்கக் கூறலாமே - உவமைக் கருத்துப் பொருந்தக் கூற முடியுமோ? (முடியாது); தாள் ஒக்க வளைந்து நிற்ப - (மன்மதன் வில்லை உவமை கூறலாமென்றால்) இரண்டு முனையும் பொருந்துமாறு வளைந்து நிற்பனவாகிய; இரண்டு அளங்க சாபம் - மன்மதனுடைய இரண்டு விற்கள்; இல்லை - உலகத்தில் இல்லை (ஆதலால், அதுவும் உவமை கூறப் பொருந்தாது). சீதையின் புருவங்கள் தம்மில் ஒன்றையொன்று ஒக்குமேயல்லாமல் வேறு ஓர் உவமைப் பொருளைப் பெறமாட்டா; ஒரு கால் ஏதாவது உவமானப் பொருளை என மனப்போக்கின்படி கூறுகின்றேன் என்று கூறலாமேயல்லாமல் அந்த உவமை அப் புருவங்களுக்குப் பொருந்திய உவமையாகாது; இழிந்த உவமையேயாகும்; இனி, மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமென்றால், முனை வளைந்தனவாகிய இரண்டு விற்கள் மன்மதனிடம் இல்லையாகையால் அம் மன்மதன் வில் உவமை என்பது ஏற்புடைத்தாகாது என்பது. இழிவுவமை: உயர்ந்த பொருளோடு இறப்ப இழிந்ததை உவமையாகக் கூறுவது. 55 |