4504. | 'கொண்டலின் குழவி, ஆம்பல், குனி சிலை, வள்ளை, கொற்றக் கெண்டை, ஒண் தரளம் என்று இக் கேண்மையின் கிடந்த திங்கள் - மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ, அப் புண்டரிகத்தை உற்ற பொழுது, அது பொருந்தி ஓர்வாய். |
கொண்டலின் குழவி - கருமேகத்தின் கொழுந்தும்; ஆம்பல் - செவ்வல்லி மலரும்; குனி சிலை - வளைந்த விற்களும்; வள்ளை - வள்ளைக் கொடியும்; கொற்றக் கெண்டை - வெற்றி மிகுந்த கெண்டை மீன்களும்; ஒண் தரளம் - ஒளி பொருந்திய முத்துக்களும்; என்ற இக்கேண்மையின் - என்று சொல்லப்பட்ட இத் தன்மையவான பொருள்கள்; கிடந்த - அமையப்பெற்ற; திங்கள் மண்டிலம் - சந்திர மண்டலத்தை; விதியே - பிரமனே; வதனம் என்று வைத்தனன் - சீதையின் முகமெனறு அமைத்து வைத்தான்; நீ அப் புண்டரிகத்தை - நீ (சீதையின்) அந்தத் தாமரை முகத்தை; உற்ற பொழுது - நெருங்க் காணும் பொழுது; அது பொருந்தி ஓர்வாய் - அத் தன்மையை நன்றாக ஆராய்ந்து அறிவாய். கொண்டல் குழவி அளகத்திற்கும், செவ்வாம்பல் வாய்க்கும், வளைந்த விற்கள் புருவங்களுக்கம் வள்ளையிலை காதுகளுக்கும், கெண்டை மீன்கள் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாயின. காண்பதற்கு இனிமையிலும், நிறத்திலும், கண்டோரை மகிழ்வித்தலிலும் முகத்திற்குத் தாமரை மலர் உவமையாயிற்று. சீதையின் முகமென்று பெயரிட்டுக் கொண்டலின் குழவி முதலியவற்றை யுடையதொரு சந்திரமண்டலத்தைப் பிரமதேவன் படைத்தான் என்று கூறியது வஞ்சவொழிப்பணி. கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர் (சிலப். கானல். 11) என்ற சிலப்பதிகார வரிகளில் உள்ள கற்பனை இங்கே நினைவுகூரத் தக்கது. விதி -பிரமன். 58 |