4505.'காரினைக் கழித்துக் கட்டி,
      கள்ளினோடு ஆவி காட்டி,
பேர் இருட் பிழம்பு தோய்த்து,
      நெறி உறீஇ, பிறங்குகற்றைச்
சோர் குழல் தொகுதி என்று
      சும்மை செய்தனையது அம்மா! -
நேர்மையைப் பருமை செய்த நிறை
      நறுங் கூந்தல் நீத்தம்!

     நேர்மையைப் பருமை செய்த - நுண்மையைக் கொண்டு பருமை
யாகச் செய்ததான; நிறை நறுங்கூந்தல் நீத்தம் - அடந்த மணங் கமழ் கின்ற
(சீதையின்) கூந்தல் தொகுதி; காரினை - கரிய மேகத்தை; கழித்துக் கட்டி -
வெட்டிக் கட்டி; கள்ளினோடு ஆவி காட்டி - தேனையும் (அகில்
முதலியவற்றின் நறுமணப்) புகையையும் ஏற்றி; பேர் இருட் பிழம்பு தோய்த்து
-
அடர்ந்த இருட் பிழம்பிலே தோய்த்து; நெறி உறீஇ - (படிப்படியாக)
நெரித்தலைச் செய்து; பிறங்கு கற்றை - விளங்குகின்ற கற்றையாகிய; சோர்
குழல் தொகுதி என்று -
(கீழே) தாழ்ந்து தொங்கும் தன்மையுள்ள
குழல்தொகுதி என்று பெயரிட்டு; சும்மை செய்து அனையது - சுமையாக
வைத்தது போன்றது.  (அம்மா - வியப்பிடைச் சொல்).

     கரிய மேகத்தைப் பிடித்துச் சீவிக் கட்டி, அதற்குத் தேனையும்
எண்ணெயையும் நறுமணத்தையும் ஊட்டி, பின்னும் கருநிறமமையச் செய்து,
குழல் தொகுதியென்று பெயரிட்டுப் பெருஞ்சுமையை வைத்தாற் போன்றது
சீதையின் கூந்தல் தொகுதியென்பது.  தன்மைத் தற்குறிப்பேற்றவணி. மெல்லிய
மயிரைத் திரட்டிப் பருமையாகப் பனிச்சைக் கொண்டை முதலியனவாகச்
செய்வதாகலின் 'நேர்மையைப் பருமை செய்த' என்றான்.  நீத்தம்: கூந்தல்
தொகுதியைக் குறித்தது.  சும்மை - சுமை என்பதன் விரித்தல்.  ஆவி:
நறும்புகை. உறீஇ - உறுவித்து; பிறவினையெச்சம்.                     59