4508. | 'குழல் படைத்து, யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி மழலையும் பிறவும் தந்து, வடித்ததை, மலரின் மேலான், இழை பொரும் இடையினாள்தன் இன் சொற்கள் இயையச் செய்தான்; பிழை இலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும்கொல் இன்னும்? |
குழல் படைத்து - வேய்ங்குழலையுண்டாக்கியும்; யாழைச் செய்து - யாழ்க் கருவியை வகுத்தமைத்தும்; குயிலொடு கிளியும் கூட்டி - குயிலையும் கிளியையும் படைத்தும்; மழலையும் பிறவும் தந்து - (எழுத்து நிரம்பாத) மழலைச் சொல்லையும், இனிய சொற்களுக்கு உவமையாகும் பொருள்களை இயற்றியும்; வடித்ததை - பழகித் தேர்ந்த நயத்தை; மலரின் மேலான் - தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன் (பின்பு); இழை பொரும் இடையினாள்தன் - நூலிழையோடு மாறுபடுகின்ற நுண்ணிய இடையையுடைய சீதையின்; இன் சொற்கள் இயையச் செய்தான் - இனிய சொற்களுக்கும் பொருந்துமாறு அமைத்தான்; பிழை இலது - (ஆனால் அச்சொற்களுக்குக்) குற்றமற்ற; உவமை காட்டப் பெற்றிலன் - உவமைப் பொருள் எதையும் உண்டாக்கவில்லை; இன்னும் பெறும் கொல் - இனிமேலாவது (அவன்) படைப்பானோ? (அறியாம்). பிரமன் சீதையின் இன்சொற்களைப் படைப்பதற்காக முதலில் வேய்ங்குழல் முதலியவற்றைப் படைத்துப் பழகிக் கைதேர்ந்த பிறகே அச்சீதையின் சொற்களைப் படைத்தான்; ஆகவே, அவற்றிற்கேற்ற உவமப் பொருள்களை இதுவரையிலும் பிரமன் படைக்க வில்லை. குழல் முதலியவற்றின் இனிமை முழுவதும் சீதையின் சொற்களில் ஒருங்கே திரண்டுள்ளன என்பது. குழல், யாழ், குயில், கிளி - (ஒலிக்கு) முதலாகு பெயர்கள். ஒப்பு: 'பளிதமும் பாலும் ஒழுகிய தேனுமா ரமுதும் குயிலினில் குரலும் கிளியினில் மொழியும் மயிலியற் சாயல் வாணுதல் தனக்கு மலரயன் வகுத்த தேன்மொழியாள்' - (அரிச். புரா) 62 |