4511. | 'எந் நிறம் உரைக்கேன்? - மாவின் இள நிறம் முதிரும்; மற்றைப் பொன் நிறம் கருகும்; என்றால், மணி நிறம் உவமை போதா; மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒலிக்கும்; வேண்டின், தன் நிறம் தானே ஒக்கும்; மலர் நிறம் சமழ்க்கும் அன்றே! |
மாவின் இள நிறம் முதிரும் - (சீதையின் மேனி நிறத்திற்கு உவமை வேண்டுமானால்) மாமரத்தின் இளந்தளிரினது நிறம் முதிர்ந்து மாறும் இயல்பினது; பொன் நிறம் கருகும் - பொன்னின் நிறமும் (இவள் நிறத்துக்கு முன்பு) கறுத்துத் தோன்றும் (ஆகையால் மாந்தளிர் நிறம் முதலியன உவமையாகா; அவ்வாறே); மணி நிறம் உவமை போதா - இரத்தினங்களின் நிறமும் உவமையாவதற்கு ஏற்ற ஒளியுடையதாகாது; மின் நிறம் நாணி - மின்னலின் நிறமோ? (சீதையின் நிறத்தைக் கண்டு) வெட்கப்பட்டு; எங்கும் வெளிப்படா ஒளிக்கும் - எந்த இடத்தும் தலைகாட்டாமல் மறைந்து விடும்; மலர் நிறம் சமழ்க்கும் - தாமரை மலரின் நிறமும் நாணும்; எந்நிறம் உரைக்கேன் - (இவ்வாறுள்ளது என்றால்) வேறு எந்த நிறத்தை உவமையாகச் சொல்வேன்? வேண்டின் - (எப்படியாவது) உவமை கூறியேயாக வேண்டும் என்றால்; தன் நிறம் தானே ஒக்கும் - (சீதையின்) நிறம் தனக்குத் தானே ஒப்பாகும். மாந்தளிர், பொன், இரத்திரனங்கள், மின்னல், தாமரை மலர் என்பவற்றை மகளிர் மேனி நிறத்துக்கு உவமை கூறுதல் கவி மரபு. ஆனால் இவற்றினும் சீதையின் மேனி நிறம் அழகில் விஞ்சியிருக்கும் என்பது. ஏதுத் தற்குறிப்பேற்றவணி. அன்றே: ஈற்றசை, தேற்றமும் ஆம்; மற்றை: அசை, மின்னல் இயல்பாகத் தோன்றி மறைவதைச் சீதையின் மேனி நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு மறைவதாகக் கூறினான். சமழ்த்தல்:நாணுதல். 65 |