இராமன் புகன்ற அடையாளச் செய்திகள் கலிவிருத்தம் 4513. | 'முன்னை நாள், முனியொடு, முதிய நீர் மிதிலைவாய், சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை, அக் கன்னி மாடத்திடைக் கண்டதும், கழறுவாய். |
முன்னை நாள் - முன்னாளில்; முனியொடு - விசுவாமித்திர முனிவருடன்; முதிய நீள் மிதிலை வாய் - நீர்வளம் உள்ள பழமையான மிதிலா நகரத்தில்; சென்னி நீள் மாலையான் - தலையில் நீண்ட மாலை புனைந்தவனான சனக மன்னனது; வேள்வி காணிய - யாகத்தைக் காண்பதற்காக; செல - (நான்) சென்றபோது; அன்னம் ஆடும் துறைக்கு அருகு - அன்னப் பறவைகள் (தத்தம் பேடைகளுடன்) விளையாடும் நீர்த்துறைக்கு அருகிலுள்ள; அக் கன்னி மாடத்திடை - அந்தக் கன்னிகா மாடத்தின் உப்பரிகையில்; நின்றாளை - நின்று கொண்டிருந்த சீதையை; கண்டதும் - பார்த்ததையும்; சுழறுவாய் - (நீ) அவளிடம் கூறுவாய். விசுவாமித்திர முனிவன் இராமஇலக்குவரைத் துணையாக வைத்துக் கொண்டு தனது வேள்வியை முடித்த பின்பு மிதிலையில் சனக மன்னன் செய்யும் யாகத்தைக் காண்பதற்காக அவர்களுடன் சென்றான்; மிதிலையில் புகுந்த பின்பு சனக மன்னனது அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியின் அருகேயுள்ள கன்னி மாடத்தின்மேல் சீதையிருக்க அவளைத் தான் கண்டதை இராமன் அடையாளமாக எடுத்துக் கூறுகின்றான்என்பது. 67 |