4514. | ' ''வரை செய் தாள் வில் இறுத்தவன், அம் மா முனியொடும் விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்'' என, கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய். |
கரை செயா வேலையின் - கரை அமைக்க முடியாத கடல் போன்ற; பெரிய கற்பினள் - சிறந்த கற்பினையுடைய சீதை; வரை செய் வில்தாள் இறுத்தவன் - மலையைப் போன்ற (சிவனுடைய) வில்லை ஒடித்தவன்; அம் மாமுனியொடும் - அத் தெய்வத் தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனுடனே; விரசினான் அல்லனேல் - வந்தவனாக இல்லாமற் போனால்; யான் உயிரை விடுதல் என - நான் எனது உயிரை விட்டுவிடுவேன் என்று; தெரிந்து உரை செய்தாள் - ஆராய்ந்து கூறினாள்; அஃது எலாம் - அந்தச் செய்திகள் அனைத்தும்; உணர நீ உரை செய்வாய் - (அவள்) தெளிவாக அறியுமாறு நீ சொல்வாய். இராமன் வில்லை முறித்த செய்தியைத் தோழி யொருத்தி சொல்லக் கேட்ட சீதை 'விசுவாமித்திர முனிவனுடன் வந்தவன் இந்த வில்லை இறுத்தவனாக இல்லாவிட்டால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன் எனக் கருதியிருந்ததைப் பின்பு இராமனிடம் சொல்லியிருக்கக் கூடுமாதலால் இங்கு அடையாளமாக அது குறிக்கப்பெற்றது. 68 |