4515. | 'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக் கேழ் இலா வன முலைக் கிரி சுமந்து இடைவது ஓர் வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று, ஆழியான் அரசவைக் கண்டதும் அறைகுவாய். |
சூழி மால் யானையி்ன் - முகபடா மணிந்த மதம் பிடித்த ஆண் யானையினது; துணை மருப்பு இணையென - ஒன்றோடு ஒன்று ஒத்து விளங்கும் இரண்டு தந்தங்கள் என்று கூறும்படி; கேழ் இலா - (அவற்றிற்கு) ஒப்பாகாத; வனம் முலைக்கிரி - அழகிய முலைகளாகிய மலைகளை; சுமந்து - தாங்கி; இடைவது - (பாரத்தைப் பொறுக்க முடியாமல்) ஒடிவதாகிய; ஓர் வானமின் இளங்கொடியின் - ஒப்பற்ற வானத்திலுள்ள மின்னலின் இளங்கொடி போல; வந்தாளை - வந்த வளாகிய சீதையை; அன்று - அக் காலத்தில்; ஆழியான் அரசவைக் கண்டதும் - ஆணைச் சக்கரமுடைய சனக மன்னனது சபையில் பார்த்ததையும்; அறைகுவாய் - சொல்வாய். முலைக் கிரியைச் சுமக்கும் மின்னிளங் கொடி சீதைக்கு, இல்பொருளுவமை. சூழி: யானையின் முகத்திடும் அணி. வாழி - அசை. 69 |