4516.'முன்பு நான் அறிகிலா
      முளி நெடுங் கானிலே,
''என் பினே போதுவான்
      நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு
      இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ?''
      என்றதும் சொல்லுவாய்.

     ஏழை- மடமைப் பண்பு மிக்கவளே!நீ - நீ; முன்பு நான் அறிகிலா-
இதுவரை நான் கண்டறியாத; முளிநெடுங் கானிலே - தீய்ந்து போன பெரிய
காட்டிலே; என் பினே போதுவான் - என்னைப் பின் தொடர்ந்து வருமாறு;
நினைதியோ -
கருதுகின்றாயோ?இன்பம் ஆய் - (இதுவரை நீ எனக்கு)
மகிழ்ச்சியைத் தந்தவளாயிருந்து; ஆர் உயிர்க்கு - (எனது) பெறுதற்கு
அருமையான உயிருக்கும்; இனியை ஆயினை -  இனியவளாக
இருந்தாய்; இனி - இனிமேல்; துன்பம் ஆய்முடிதியோ -
துன்பத்தைத் தருபவளாக ஆகிவிடுவாயோ?  என்றதும் - என்று நான்
சீதையிடம் கூறியதையும்; சொல்லுவாய் - (நீ அவளிடம்) சொல்வாய்.

     கைகேயி விருப்பத்தின்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில்
வாழ உடன்பட்டுச் சீதையிடம் சென்று 'நான் பதினான்கு வருடம் வனவாசம்
செய்து மீண்டு வருவேன்; நீ இங்கே வருந்தாமல் இரு' என்றான்; அதுகேட்ட
சீதை கணவன் காட்டிற்கு செல்லுகின்றான் என்பது குறித்துச் சிறிதும்
வருந்தாமல் 'நீ இங்கே வருந்தாமல் இரு' என்று கூறிய சொல்லுக்கு மிக
வருந்தி உடன்வருவேனென்று வற்புறுத்திக் கூற, அதற்கு இராமன்
'எல்லையற்ற இடர் தருவாய்' என்றான் என்பது (1832) இங்கு நினைவு
கூரத்தக்கது.                                                  70