மோதிரம் அளித்து விடைகொடுத்தல்

4519. இனைய ஆறு உரைசெயா,
     'இனிதின் ஏகுதி' எனா,
வனையம் மா மணி நல்
      மோதிரம் அளித்து, 'அறிஞ! நின்
வினை எலாம் முடிக!' எனா,
      விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான்
     அருளொடும், போயினான்.

     இனைய ஆறு உரைசெயா - (இராமன்) அனுமனிடம் இவ்விதமாக
அடையாளங்களைச் சொல்லி; இனிதின் ஏகுதி எனா - இனிதாகச் செல்வாய்
என்று கூறி; மா மணி வனையும் - சிறந்த இரத்தினங்கள் பதித்துச்
செய்யப்பட்ட; நல் மோதிரம் அளித்து - சிறந்த மோதிரத்தைக் கொடுத்து;
அறிஞ -
அறிவு மிக்கவனே!நின் வினை எலாம் - நீ மேற்கொண்ட செயல்
முழுவதும்; முடிக எனா - (இடை யூறில்லாமல்) இனிது முடிவதாகுக என்று;
விடை கொடுத்து உதவலும் -
விடைதந்து அனுப்பிய அளவில்; புனையும்
வார் கழலினான் -
கட்டப்பட்ட நீண்ட வீரக் கழலைப் பூண்டவனான
அனுமன்; அருளொடும் போயினான் - இராமனின் கருணையை முன்னிட்டுக்
கொண்டு சென்றான்.

     அடியார்கள் கடவுளின் அருளை முன்னிட்டுக் கொண்டு செய்தொழில்
தொடங்குதல் இயல்பாதலின் 'வார்கழலினான் அருளொடும் போயினான்' என்று
கருத்தில் கழலினான் என்பது இராமனைக் குறித்ததாகவும் பொருள்
கொள்ளலாம்.  அசோக வனத்துச் சோகத்தாளாகிய நங்கைக்கு நன்னம்பிக்கை
தருவதற்கு உரியதாகலின் 'நல்மோதிரம்' என்று கூறப்பெற்றது.          73