4520. | அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவர் ஆம் வெங் கதத் தலைவரும், விரி கடற் படையொடும், பொங்கு வில் - தலைவரைத் தொழுது, முன் போயினார் - செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். |
அங்கதக் குரிசிலோடு - அங்கதனாகிய நம்பியினுடனே; அடு சினத்து உழவர் ஆம் - (பகைவரைக்) கொல்லுகின்ற கோபத்தையுடைய வீரரான; வெங் கதத் தலைவரும் - மிக்க வலிமையுள்ள (ஜாம்பவான் முதலான) தளபதிகளும்; செங்கதிர்ச் செல்வனை - சிவந்த கதிர்களை யுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை; பணிவரும் சென்னியார் - வணங்கும் தலையினராய்; பொங்கு வில் தலைவரைத் தொழுது - சிறந்த வில்வீரர்களான இராமஇலக்குவரையும் வணங்கி; விரிகடற் படையொடும் - பரந்த கடல்போன்ற வானர சேனையுடனே; முன் போயினார் - (தென்திசை நோக்கி) முற்பட்டுச் சென்றார்கள். அங்கதன் முதலியோர் சுக்கிரீவனையும், இராம இலக்குவரையும் வணங்கித் தமக்கு நியமித்துள்ள தென்திசை நோக்கிப் புறப்பட்டார்களென்பது. உழவர்: வீரர்: பகைவரின் உடம்பாகிய வயல்களில் தம் படைகளாகிய கலப்பைகளைக் கொண்டு உழுது வெற்றியாகிய பயிரை விளைப்பவராதலால் இது வீரரைக் குறிக்கும். - வில்லேருழவர் வாளேருழவர், சொல்லேருழவர் என்றாற்போல. 74 |