4522. | குன்று இசைத்தன எனக் குவவு தோள் வலியினார், மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய், வன் திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழுடைத் தென் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரைசெய்வாம். |
குன்று இசைத்தன என - மலைகளே பொருந்துமாறு வைக்கப் பட்டுள்ளன வென்னும்படி; குவவுதோள் வலியினார் - அமைந்த திரண்ட தோள்வலிமையுடைய வானரவீரர்கள்; மின் திசைத்திடும் - மின்னலும் திகைக்கும் படியான; இடைக் கொடியை விராய் நாடினர் - இடையையுடைய பூங்கொடிபோன்ற சீதையைத் தேடினவர்களாய்; வன்திசைப்படரும் ஆறு - (கிழக்கு, மேற்கு, வடக்கு என்ற மூன்று) திசைகளிலே செல்லுகின்ற வகை; ஒழிய - தவிர்த்து; வண்தமிழுடைத் தென்திசை - வளமான தமிழ்மொழி வழங்கும் தெற்குத்திசை; சென்றுளார் - சென்றவராகிய வானர வீரர்களின்; திறன் எடுத்து உரை செய்வாம் - செயல்திறனை எடுத்துச் சொல்லுவோம். மற்றைத் திசைகளிற் சென்ற வானரர் செய்தி கதைப் போக்கிற்கு வேண்டுவதில்லையாதலால் அதைத் தவிர்த்து, இக் கதைக்கு மிக இன்றியமையாததாகிய தென்திசைக்கண் சென்ற வானர வீரர் செயலைக் கூறுகின்றார். என்றுமுள தென்தமிழாதலானும, உலகிலே இலக்கண வரம்பிலா மொழிகள் போலல்லாமல் இலக்கண வளமுடைமையானும், திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான மொழிகளுக்குத் தாயெனக் கருதப்படுவதாலும், கொல்வளம், பொருள்வளம், இனிமை எளிமை முதலியன உண்மையானும் சமய குரவர்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப்பரவியது தமிழ் மொழியே யாதலினாலும் 'வண்டமிழ்' என்றார். சீதையைக் காண்டற்கியையாததாதலின் தென்திசை யொழிந்த மூன்றையும் 'வன்திசை' யென்றும், இனிய தமிழ் வழங்கும் திசையாதலின் 'தென்திசை' யென்றும் கூறினார். ஆசிரியர்தம் நாட்டுப்பற்றும், தமிழ்ப்பற்றும் இப்பாடலிற் பொங்கித் ததும்புவதைக்காணலாம். 2 |