விந்தமலைப் பக்கங்களில் தேடுதல் 4523. | சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து, அந்தி வானத்தின் நின்று அவிர்தலான், அரவினோடு இந்தி யாறு எய்தலான், இறைவன் மா மௌலிபோல் விந்த நாகத்தின் மாடு எய்தினார், வெய்தினால். |
சிந்துராகத்தோடும் - சிந்துரமென்னும் செம் பொடியோடும்; திரள் மணிச்சுடர் செறிந்து - திரண்ட மாணிக்கங்களின் ஒளி நெருங்கி; அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் - அந்தி வானத்தில் காணப்படும் செவ்வானம்போல விளங்குவதாலும்; அரவினோடு இந்து யாறு எய்தலான் - பாம்புகளும், சந்திரனும் வான கங்கையும் பொருந்துவதாலும்; இறைவன் மா மௌலி போல் - சிவபெருமானின் பெரிய சடைமுடி போன்ற; விந்தநாகத்தின் மாடு - விந்திய மலையின் சாரலை; வெய்தினால் எய்தினார் - விரைவாகச் சென்ற அடைந்தார்கள். சிவபெருமானுக்கும் விந்திய மலைக்கும் ஒப்பு: செம்மொழிச் சிலேடை, சிவபிரான் செஞ்சடை முடியுடையோனானது, தாருக வன முனிவர்களால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த நாகங்களை வலியடக்கி அணியாகப் பூண்டது. தக்கனது சாபத்தால் கலை குறைந்த சந்திரனைச் சடைக்கண் தரித்தது. பகீரதனது வேண்டுகோளினால் கங்கையை முடிமீது கொண்டது என்ற இவை சிவபிரான் செய்கைகளாம். சிந்துரப் பொடியாலும், மாணிக்கங்களாலும் சிவந்திருப்பது, நாகங்களும் நீரருவிகளும் நிறைந்திருப்பது, மலையுச்சியில் சந்திரன் ஒளிர்வது என்ற இவை விந்திய மலையிற் காண்பவை. இந்தியாறு : குற்றியலிகரம். (இந்து + யாறு) ஒப்பு : 'பாணி பிறை கொன்ற பணிசூடி மானேந்தி வேணி யரனைப் பொருவும் வேங்கடம்' (திருவேங்கட மாலை - 5) சிந்துராகம் - சிந்தூர ராகம் என்னும் வடமொழி விகாரம். ராகம் - நிறம். 3 |