4524. | அந் நெடுங் குன்றமொடு, அவிர் மணிச் சிகரமும், பொன் நெடுங் கொடிமுடிப் புரைகளும், புடைகளும், நல் நெடுந் தாழ்வரை நாடினார், - நவை இலார் - பல் நெடுங் காலம் ஆம் என்ன, ஓர் பகலிடை. |
நவை இலார் - குற்றமற்ற அந்த வானர வீரர்கள்; அந்நெடுங் குன்றமொடு - உயர்ந்துள்ள அந்த விந்திய மலையினிடத்தில்; அவிர் மணிச் சிகரமும் - ஒளிவீசும் இரத்தினங்களையுடைய சிகரங்களையும்; பொன் நெடுங்கொடு முடிப் புரைகளும் - அழகான நீண்ட அந்தச் சிகரங்களிலுள்ள குகைகளையும்; புடைகளும் - பக்கங்களையும்; நல் நெடுந் தாழ்வரை - அழகிய நீண்ட அடிவாரங்களையும்; ஓர் பகலிடை - ஓரு பகற்பொழுதுக்குள்ளாக; பல் நெடுங் காலம் ஆம் என்ன - மிகுதியான பல நாள்கள் தேடிக் காண்பது போன்று; நாடினார் - தேடினார்கள். வானரர்கள் மிகப் பலராயிருந்ததாலும், செய் தொழிலை மிக்க ஊக்கத்தோடு செய்ததாலும் பலகாலம் செய்யக்கூடிய பணிகளை ஒரு பகற்பொழுதிலேயே செய்துமுடித்தனர் என்பது. குன்றமொடு : வேற்றுமை மயக்கம். புரை : துளை - இங்கே குகையைக் குறித்தது. 4 |