4525. மல்லல் மா ஞாலம் ஓர்
      மறு உறாவகையின், அச்
சில் அல் ஓதியை
      இருந்த உறைவிடம் தேடுவார்,
புல்லினார் உலகினை, பொது
      இலா வகையினால்,
எல்லை மா கடல்களே
      ஆகுமாறு, எய்தினார்.

     எல்லை மா கடல்களே - (பூமியைச் சுற்றிலும்) பெரிய எல்லை
யாகவுள்ள கடல்களே; ஆகுமாறு எய்தினார் - தமக்கு ஒப்பாகும் என்று
சொல்லுமாறு சென்ற அந்த வானரவீரர்கள்; மல்லல் மா ஞாலம் - வளமை
மிக்க பெரிய பூமியிலுள்ள உயிர்களுக்கு; ஓர் மறு உறா வகையின் -
எவ்விதத் துன்பமும் உண்டாகாத வகையில்; அச்சில் அல் ஓதிஐ - அந்தப்
பொன்தகட்டையணிந்த இருண்ட கூந்தலையுடைய சீதையை; இருந்த
உறைவிடம் -
(அவள்) தங்கியிருந்த இடத்தை; தேடுவார் - தேடுபவர்களாய்;
உலகினை -
(அவ்விந்திய மலையின்) பூமி முழு வதையும்; பொது இலா
வகையினால் -
தம்மையல்லாமல் வேறெவர்க்கும் எவ்விதத்
தொடர்புமில்லாதபடி; எய்தினார் - சென்று அடைந்தார்கள்.

     வானரர்கள் விந்தியமலையில் எந்த இடமும் விட்டுப்போகாதவாறு தாமே
பரவிநின்று முழுவதும் சீதையைத் தேடினார்களென்பது.  அம்சில் ஓதி -
அஞ்சில் ஓதி என விகாரமாகலாம்.  சில் : மகளிர் தலையிலணியும் தகட்டணி.
சில்அல் ஓதி : அன்மொழித் தொகைப் பன்மொழித்தொடர். உலகு : பரந்த
பூமியின் ஒரு பகுதி. ஓதியை என்றதில் பொருந்திய இரண்டாம் வேற்றுமை
உருபு பிரித்துக் காட்டப்பட்டது.  இருந்த உறைவிடம் என்பது இருந்துறைவிடம்
எனச் செய்யுட் சந்தம் நோக்கி அகரம் தொகுத்து இயையும்.             5