4526. | விண்டு போய் இழிவர்; மேல் நிமிர்வர்; விண் படர்வர்; வேர் உண்ட மா மரனின், அம் மலையின்வாய், உறையும் நீர் மண்டு பார்அதனின், வாழ் உயிர்கள் அம் மதியினோர் கண்டிலாதன, அயன் கண்டிலாதனகொலம். |
அம்மதியினோர் - நல்லறிவுடைய அந்த வானரர்கள்; விண்டு போய - (தனித்தனியே) பிரிந்து சென்று; இழிவர் - (சிலர்) இறங்கிச் செல்வர்; மேல் நிமிர்வர் - (சிலர்) மேலேறிச் செல்வர்; விண் படர்வர் - (சிலர்) வானத்தில் தாவிச் செல்வர்; வேர் உண்ட மா மரனின் - வேர்களால் நீரை உறிஞ்சும் மரங்களினிடத்தும்; அம்மலையன் வாய் - அந்த மலையினிடத்தும்; உறையும் நீர் மண்டு - தங்கிய நீர் நிரம்பப் பெற்ற; பார் அதனின் - பல இடங்களிடத்தும்; வாழ் உயிர்கள் - வாழுகின்ற உயிர்களில்; கண்டிலாதன - (அவ் வானர வீரர்களால்) தேடிக் காணப்படாதன இருக்குமானால் (அவை); அயன் கண்டிலாதன ஆம் - பிரமனால் படைக்கப் படாதவையேயாகும். மரஞ் செறிந்த இடங்களும் வெற்றிடமும் புனல் நிரம்பிய இடமுமாய் மூன்று பகுப்பாயுள்ள அந்த விந்தியமலை முழுவதிலும் பிரமனது படைப்பிற்கு உட்பட்ட எல்லாவுயிர்களையும் வானரர்கள் தேடிப் பார்த்தார்களென்பது. பிரமன் படைக்காத பொருள்கள் இல்லை; அதுபோன்று இந்த வானர வீரர்கள் காணாத உயிர்களோ பொருள்களோ இல்லை. நீர் மண்டு பார்: ஓடை, சுனை முதலியன. வேறு உரை: விண்டு போய் இழிவ - நிலத்தைத் துளைத்துக் கொண்டு பூமிக்குள் செல்லும் (பாம்பு முதலிய) ஊர்வனவும்; மேல் நிமிர்வ - நிலத்தில் வாழும் விலங்கினங்களும்; விண் படர்வ -ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுமாய் அம் மலையின் கீழும் மேலும் புடையிலும் உறையும் உயிர்களில் இவர்கள் கண்ணில் படாதன ஒன்றுமேயில்லை எனவும் உரை கூறலாம். 6 |