4528. அன்னம் ஆடு இடங்களும், அமரர் நாடியர்
துன்னி ஆடும் இடங்களும், துறக்கம் மேயவர்
முன்னி ஆடும் இடங்களும், சுரும்பு மூசு தேன்
பன்னி ஆடு இடங்களும், பரந்து சுற்றினார்.

     அன்னம் ஆடு இடங்களும் - அன்னப் பறவைகள் விளையாடும்
இடங்களையும்; அமரர் நாடியர் - தேவ மாதர்களான அரம்பை முதலிய
பெண்கள்; துன்னி ஆடு இடங்களும் - வந்து நீராடும் இடங்களையும்;
துறக்கம் மேயவர் -
சொர்க்கலோகத்திலுள்ள வானவர்;  முன்னி
ஆடு இடங்களும் -
வந்து சஞ்சரிக்கும் இடங்களையும்; சுரும்பு மூசு தேன்
-
சுரும்புகளும், நறுமண மலர்களில் மொய்க்கும் தேன் என்ற வண்டுகளும்;
பன்னி ஆடு இடங்களும் -
பாடித் திரிகின்ற இடங்களையும்; பரந்து
சுற்றினார் -
துழாவித் தேடித் திரிந்தார்கள்.

     நருமதையாற்றின் பெருஞ்சிறப்பாலும், அதனைச் சார்ந்த இடங்களின்
மிக்க இனிமையாலும் அங்கே தேவமாதர்களும், தேவர்களும் வரலாயினர்
என்பது.  சுரும்பு, தேன்: வண்டின் வகைகள்.  சுரும்பு எனும் வண்டுகள்
எல்லாப்பூமணத்திலும் செல்லும் தன்மையன என்றும், தேன் என்னும்
வண்டுகள் நறுமண மலரிடத்தே மட்டும் செல்லும் தன்மையன என்றும்
கூறுவர்.                                                      8