4529. | பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார், அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ் நிறை நறுந் தாமரை முகமும், நித்தில முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார். |
பெறல் அருந் தெரிவையை - பெறுதற்கு அரிய சீதையை; நாடும் பெற்றியார் - தேடும் தன்மையுடையவர்களான வானரர்கள்; அறல் நறுங் கூந்தலும் - கருமணலாகிய நறுமணமுள்ள அவளது கூந்தலையும்; அளக வண்டுசூழ் நிறை - கூந்தல் போலக் கருநிறமுள்ள வண்டுகள் சூழ்ந்து நிறைந்துள்ள; நறுந்தாமரை முகமும் - தாமரை மலராகிய அவளது முகத்தையும்; நித்தில முறுவலும் - (அலைகளால் கொழிக்கப்படுகின்ற) முத்துக்களாகிய அவளுடைய பற்களையும்; காண்பர் - காண்பார்கள்; முழுதும் காண்கிலார் - (ஆனால்) சீதையின் உருவ முழுவதையும் ஒருசேரக் காணாதவரானார்கள். ஆல் - அசை. சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்கள் நருமதையாற்றின்கரையில் அச் சீதையின் உருவ முழுவதையும் பார்க்கமுடியாமல் அவளது முகத்திற்கும் அந்த முகத்திலுள்ள உறுப்புகளுக்கும் ஒப்பான சில பொருள்களை மட்டுமே கண்டனர்; தாம் தேடிவந்த சீதையின் முழுஉருவத்தையும் நிகர்த்தனவற்றைக் காணவில்லை. போலிகளிலும் முழுமையானவற்றை - சீதைக்கு முழுமையாக ஒப்பு கூறத்தக்கனவற்றை வானரர் காணவில்லை. நருமதையாற்றில் கருமணல் சீதையின் கூந்தலையும், தாமரை மலர்கள் முகத்தையும், அதன் கரையில் கிடக்கும் முத்துக்கள் பற்களையும் ஒக்கும் என்பது. அளக வண்டுசூழ் தாமரைமுகம் - உவமையை அங்கமாகக் கொண்ட உருவகம். அறற் கூந்தல், நித்தில முறுவல் - உருவகம். காண்பரால் முழுதும் காண்கிலார்: முரண்தொடை. 9 |