4530.செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர்,
தரும தயா இவை தழுவும் தன்மையர்,
பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல்
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார்.

     செரு மத யாக்கையர் - போர் புரிவதில் எக்களிப்புக் கொண்ட
உடம்பினையுடையவர்களும்; திருக்கு இல் சிந்தையர் - மாறுபாடற்ற
மனமுடையவர்களும்; தருமம்தயா இவை தழுவும் தன்மையர் - தரும மும்
அருளும் இயல்பாக அமைந்த தன்மையுடையவர்களுமாகிய வானரர்கள்;
பொரு மத யானையும் -
போர் செய்கின்ற மதங் கொண்ட
ஆண்யானைகளும்; பிடியும் - பெண் யானைகளும்; புக்கு உழல் - புகுந்து
விளையாடுகின்ற; நருமதை ஆம் எனும் நதியை - நருமதை என்னும் பேர்
கொண்ட ஆற்றை; நீங்கினார் - கடந்து சென்றார்கள்.

     யாக்கை : உதிரம் முதலான எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது
என்று உடலுக்குக் காரணக்குறி.  திருக்கு இல்சிந்தையர்:  (குரங்குத்
தன்மையால்) மாறாமல் ஒருபடித்தாய மனமுடையவர். ஆம் :அசை.     10