4532. | மாடு உறு கிரிகளும், மரனும், மற்றவும், சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப் பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது; வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது; |
மாடு உறு கிரிகளும் - (அந்த ஏமகூட மலை) பக்கத்திலுள்ள மலைகளும்; மரனும் - மரங்களும்; மற்றவும் - பிற பொருள்களும்; சூடு உறு பொன் என - சுடச்சுடரும் பொன்போல; பொலிந்து தோன்றுற- விளங்கித் தோன்றும்படி; பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது - பெருமை மிக்க ஒளியைப் பரவச் செய்கின்றது; வீடு உறும் உலகினும் - சுவர்க்கலோகத்தைக் காட்டிலும்; விளங்கும் மெய்யது - மிகுதியாக ஒளி விளங்கும் தோற்றத்தையுடையது. பொன் போன்ற நிறமுள்ள அந்த ஏம கூடத்தின் ஒளியால் அதன் பக்கமுள்ள பொருள்களெல்லாம் பொன்னிறமாகக் காணப்பட்டன என்பது அஃதாவது மலைகளும் மரமும் பிறவும் தமது இயற்கை நிறம் மாறி அருகிலுள்ள ஏமகூடத்தின் நிறத்தையடைந்தன, என்றார். இது பிறிதின் குணம் பெறலணி. பாடு: பெருமை. பொன்னுலகென்று அழைக்கப் பெறும் சுவர்க்கலோகத்திலுள்ள பொருள்கள் யாவும் பொன்மயமாக விளங்குமென்பது புராண நூற்கொள்கை. 12 |