4534. | பரவிய கனக நுண் பராகம் பாடு உற எரி சுடர்ச் செம் மணி ஈட்டத்தோடு இழி அருவிஅம் திரள்களும் அலங்கு தீயிடை உருகு பொன் பாய்வ போன்று, ஒழுகுகின்றது: |
பரவிய கனக நுண் பராகம் - பரவியுள்ள பொன்னின் சிறுதுகள்கள்; பாடு உற - தம்மிடத்தில் பொருந்த; எரிசுடர்ச் செம்மணி - விளங்குகின்ற ஒளியையுடைய சிவந்த பதுமராக இரத்தினங்களின்; ஈட்டத்தோடு இழி அம்திரள் - தொகுதியோடு கீழே இறங்குகின்ற; அருவிகளும் - அருவிகளாகிய அழகிய கூட்டங்களும்; அலங்கு தீயிடை - எரிகின்ற நெருப்பிலே; உருகு பொன் - உருகிய பொன்னானது; பாய்வ போன்று - பாய்ந்தோடுவது போல; ஒழுகுகின்றது - ஒழுகப்பெறும் தன்மையது. பொற்கொடிகள் பொருந்திச் செம்மணியின் நிறமமைந்த பெருகுகின்ற நீர்ப் பெருக்கிற்கு, நெருப்பிலுருக்கி ஓடவிட்ட பொன்னை உவமையாகக் குறித்தார். கனக பராகம்: பொன்துகள்; செம்மணி: மாணிக்கம். செம்மணிகளில் பொன்மயமான அருவிகள் பாய்வது, தீயினிடையில் பொன் உருகுவதுபோலுமென வருணித்தவாறு. 14 |