4535.விஞ்சையர் பாடலும், விசும்பின்
      வெள் வளைப்
பஞ்சின் மெல் அடியினார்
      ஆடல் பாணியும்,
குஞ்சர முழக்கமும்,
      குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும்,
      மயங்கும் மாண்பது;

     விஞ்சையர் பாடலும் - (அங்கு வந்துள்ள) வித்தியாதரர்களின்
பாட்டொளியும்; விசும்பின் வெள்வளைப் பஞ்சின் மெல் அடியினார் -
தேவலோகத்திலிருந்து வந்தவரான வெண்மையான வளையல்களை யணிந்த
பஞ்சுபோன்ற மெல்லிய அடிகளையுடைய தேவமாதர்களின்; ஆடல்
பாணியும்-
ஆடலோடு இசைந்த தாளங்களின் ஒலியும்; குஞ்சர
முழக்கமும் -
யானைகளின் பிளிற்றோசையம்; குமுறு பேரியின் -
முழங்குகின்ற முரசுபோன்ற; மஞ்சு இனம் உரற்றலும் - (அங்கு வந்து
தங்கும்) மேகக்கூட்டங்களின் இடியோசையும்; மயங்கும் - கலந்துள்ள;
மாண்பது - பெருமையுடையது.

     ஆடல்பாணி: நாட்டியத்துக்கேற்ற தாளம்.  பாணி: கையினால்
ஒத்தறுத்துத் தாளம்போடுவது.                                    15