4538. | இரிந்தன, கரிகளும் யாளி ஈட்டமும்; விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின; திரிந்தனர், எங்கணும் திருவைக் காண்கிலார், பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என, |
(அவ்வாறு மலைமேல் ஏறிய வானரர்களைக் கண்டு)கரிகளும் - யானைகளும்; யாளி ஈட்டமும் - யாளிகளின் கூட்டமும்; இரிந்தன - (பயந்து) விலகியோடின; விரிந்த கோள் அரிகளும் - (அம்மலை மேல்) பரந்திருந்த கொல்லுமியல்புள்ள சிங்கங்களும்; வெருவி நீங்கின - அஞ்சி நிலைகெட்டு அகன்றன; (அவ்வானரர்கள்) எங்கணும்திரிந் தனர் - மலை முழுவதும் தேடிப் பார்த்தவர்களாகி; திருவைக் காண்கிலார் - சீதையைக் காணாதவராகி (அதனால்); பரிந்தன சிந்தனை - மனம் நொந்தவர்களாய்; பரிகின்றாம் என - (இப்பொழுது) மிக வருந்துகின்றோம் என்று (நைந்து). அடுத்த பாடலில் 'தேடினார்' என முடியும். கோள் அரி : சிங்கம்; பிறவற்றின் உயிரைக் கொள்வது. 18 |