சீதையைக் காணாமல் இறங்குதல்

4539. ஐம்பதிற்று இரட்டி
      காவதத்தினால் அகன்று,
உம்பரைத் தொடுவது ஒத்து,
      உயர்வின் ஓங்கிய,
செம் பொன் நல் கிரியை
      ஓர் பகலில் தேடினார்;
கொம்பினைக் கண்டிலர்
      குப்புற்று ஏகினார்.

     (வானரர்கள்) ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று- நூறு காத
அளவு அகலமுடையதாய்; உம்பரைத் தொடுவது ஒத்து - வானத்தைத்
தீண்டுவது போன்று; உயர்வின் ஓங்கிய - மிகவும் உயர்ந்துள்ள; செம்பொன்
நல்கிரியை -
செம்பொன் மயமான அழகிய அந்த ஏமகூட மலையில்; ஓர்
பகலில் தேடினார் -
ஒரு பகல் முழுவதும் தேடிப் பார்த்தனர்; கொம்பினைக்
கண்டிலர் -
(ஆனால்) பூங்கொம்பு போன்றவர்களாகிய சீதையைக்
காணாதவர்களாகி; குப்புற்று ஏகினார் - (அம் மலையிலிருந்து) இறங்கிச்
சென்றார்கள்.

     ஏமகூடத்தைப் புகழ்ந்து அதனைச் செம்பொன் நற்கிரியென்றார்.
கொம்பு : உவமவாகுபெயர். குப்புறுதல் : கீழிறங்குதல்.                 19