துன்புற்ற வானரர் பிலத்தில் புகுதல் 4545. | ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது, உயிர் பிதுங்கல் ஆம் உடலினர், முடிவு இல் பீழையார், பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார், பல விதங்களால், நெடும் பில வழியில் மேவினார். |
(வானர வீரர்)ஒதுங்கலாம் நிழல் இறை காண்கிலாது - (வெயிலுக்கு) ஒதுங்கக் கூடிய சிறிதளவு நிழலைக்கூடக் காணமாட்டாது; உயிர் பிதுங்கல் ஆம் உடலினர் - உயிர் வெளியேறக் கூடிய உடலையுடையவர்களும்; முடிவு இல் பீழையார் - எல்லையற்றதுன்பத்தையடைந்தவர்களும்; பதங்கள் நீர்ப்பருகிடப் பதைக்கின்றார் - அடிகளில் (அப் பாலைவனத்தின்) சூடு தாக்குவதால் துடிதுடிக்கின்றவர்களுமாய்; பல விதங்களால் - (அந்த வெப்பத்திலிருந்து தப்புவதற்குப்) பல வகையிலும் முயற்சி செய்து முடிவாக; நெடும் பில வழியில் - (அங்கே இருந்த) பெரிய பிலத் துவாரத்தின் வழியை; மேவினார் - அடைந்தார்கள். வானரவீரர்கள் அந்தப் பாலைவனத்தில் ஒதுங்கித் தப்புவதற்குச் சிறு நிழல் கூட அகப்படாமல் உயிர் நீங்கும் நிலையையடைந்து, முடிவாக அங்கே காணப்பட்ட ஒரு பிலத்தின் வழியைச் சேர்ந்தனர் என்பது. பீழை: துன்பம் பிதுங்கல்: வெளிப்படல். 25 |