4546.'  'மீச் செல அரிது இனி,
      விளியின் அல்லது;
தீச் செல ஒழியவும்
      தடுக்கும்; திண் பில -
வாய்ச் செலர் நன்று'
      என, மனத்தின் எண்ணினார்;
போய்ச் சில அறிதும்'
      என்று, அதனில் புக்கனர்.

     இனி - இனிமேல்; விளியின் அல்லது - இறந்து விடுதலல்லாமல்;
மீச்செலவு அரிது -
இதைக் கடந்து அப்பால் செல்லுதல் நமக்கு முடியாத
செயலாகும்; (ஆகையால்) திண் பிலம் வாய்ச் செலல் - வலிய பிலத்தின்
வழியே செல்லுதல்; தீச்செலவு ஒழியவும் தடுக்கும் - வெப்பமான
பாலை நிலத்தில் செல்வதையாவது தடுக்கும்; (ஆகவே) நன்று
என -
(இப் பிலத்துள செல்வதே) நல்லது என்று; மனத்தின் எண்ணினார் -
மனத்திற் கருதியவர்களாய்; போய்ச் சில அறிதும் என்று - (இதனுள்) சென்று
அங்குள்ள சிலவற்றை ஆராய்வோமென்று கூறி; அதனில் புக்கனர் -
அப்பிலத்தினுள் புகுந்து சென்றார்கள்.

     இந்தப் பாலைவனத்தில் இனி ஒரு நொடி செல்வதும் உயிரழிவுக்கே
காரணமாகும்; ஆகவே, இங்கே காணப்படுகின்ற பில வழியில் சென்றால் அது
சீதையிருக்கும் இடமாக இல்லாவிட்டாலுங் கூடப் பாலை நிலத்தின்
வெம்மையையாவது தணிக்கும்: ஆதலால், இப்போது இங்கே செல்வதே நாம்
செய்யத்தக்கது; மேலும், இதனுள்ளிருக்கும் சில இடங்களிலும் சீதையைத்
தேடிப் பார்ப்போ மென்று கருதி வானர வீரர்கள் அப் பிலத்தினுள் புகுந்தனர்
என்பது.

     திண் பிலம் - எளிதில் கடத்தற்கரிய பிலம்.

     ஒழியவும் - இழிவு சிறப்பும்மை.

     'ஒழிய' என்னும், செயவென்னெச்சம் தொழிற்பெயர்த்  தன்மைத்தாகித்
'தடுத்தல்' தொழிற்குச் செயப்படு பொருளாய் நின்றது.                  26