வானரர் இருளில் வருந்துதல் 4547. | அக் கணத்து, அப் பிலத்து அகணி எய்தினார், திக்கினொடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள், எக்கிய கதிரவற்கு அஞ்சி, ஏமுறப் புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார். |
அக்கணத்து - (வானர வீரர்கள்) அப்பொழுது; அப்பிலத்து அகணி எய்தினார் - அந்தப் பிலத்தின் உள்ளிடத்தையடைந்தவர்களாய்; திக்கினொடு உலகு உற - நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தும்; செறிந்த தேங்கு இருள் - மிக நெருங்கி நிறைந்த பேரிருள்; எக்கிய கதிரவற்கு அஞ்சி - (வானத்தில்) ஏறிய சூரியனிடம் அச்சங் கொண்டு; ஏமுறப்புக்கதே அனையது - பாதுகாப்பு அடையப் புகுந்தது போலத் தோன்றுவதாகிய; ஓர்புரை - ஒரு குகையில்; புக்கு எய்தினார் - புகுந்து சென்றார்கள். வானர வீரர் பிலத்துள் புகுகையில் அதனிடையிலே இருள் செறிந்த ஒரு குகையிலே நுழைந்து செல்லலாயினர் என்பது. அங்கு நிறைந்திருந்த இருளை, தனக்குப் பகைவனான கதிரவனுக்கு அஞ்சிப் பிலத்துள் பதுங்கியிருப்பதாகக் குறித்தது தன்மைத் தற்குறிப்பேற்றவணியாம். எக்கிய - ஏறிய (திசைச் சொல்) அகணி - உள்ளிடம்; புரை: உள்ளறை; (ஏமமுற): ஏமுறு: தொகுத்தல் விகாரம். 27 |