4548.எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்;
இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள்,
முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார்.  *

     (அவர்கள்) எழுகிலர் - (அப்பாலே செல்ல) எழுந்து புறப்படாமலும்;
கால் எடுத்து ஏகும் எண்இலர் -
அடிவைத்துச் செல்லும் கருத்தில்லாமலும்;
வழி உளது ஆம் எனும் -
அப்பாலே செல்லுவதற்குரிய வழியுள்ளது
என்னும்; உணர்வு மாற்றினார் - உணர்வையும் மாற்றிக் கொண்டவர்களாய்;
இழுகிய நெய் எனும் -
விழுதாக உறைந்த நெய் போன்ற; இருட்
பிழம்பினுள் -
இருளின் தொகுதியில்; முழுகிய - மூழ்கி விட்ட; மெய்யர்
ஆய் -
உடம்பையுடைவர்களாய்; (ஒருவர்க்கொருவர் இருப்பிடம் அறிந்து
கொள்ள முடியாமல்); உயிர்ப்பு முட்டினார் - (மனத்துயராலும் அச்சத்தாலும்)
பெருமூச்செறிந்தார்கள்.

     வானரவீரர் இருட்பிழம்பினுள் அகப்பட்டுக் கொண்டதால் மேற்கொண்டு
செய்யும் செயலில் நாட்டமில்லாது ஒருவரையொருவர் காணமுடியாது
திகைத்துப் பெருமூச்சுவிட்டார்கள் என்பது. உயிர்ப்பு முட்டுதல் :
மூச்சுமுட்டுதல் என்பது வழக்கு.                                     28