வானரர் வேண்டிக் கொண்டபடி,
அனுமன் அவர்களைக் கொண்டு செல்லுதல்

4549. நின்றனர், செய்வது ஓர்
      நிலைமை ஓர்கிலர்,
'பொன்றினம் யாம்' எனப்
      பொருமும் புந்தியர்,
'வன் திறல் மாருதி!
      வல்லையோ எமை
இன்று இது காக்க?'
      என்று, இரந்து கூறினார்.

     செய்வது ஓர் நிலைமை - (அனுமனைத் தவிர மற்றைய வானர
வீரர்கள்) இன்னது செய்யவேண்டும் என்ற செயலையும்; ஓர்கிலர் நின்றனர் -
உணரமாட்டாது நின்றவர்களாய்; பொன்றினம் யாம் என - இறந்துவிட்டோம்
நாம் என்று; பொருமும் புந்தியர் - வருந்துகின்ற மனமுடையவர்களுமாகி;
வன்திறல் மாருதி -
(அனுமனை நோக்கி) மிக்க வலிமையுடைய அனுமானே!
இன்று -
இப்பொழுது; எமை இது காக்க வல்லையோ - எங்களை
இத்துயரத்திலிருந்து காப்பதற்கு வல்ல மையுடையையோ என்று முறையிட்டு;
இரந்து கூறினார் -
வேண்டிக் கொண்டார்கள்.

     இருள் தொகுதியில் அகப்பட்டுக் கொண்ட அந்த வானரவீரர் தம்மை
இறந்து போனவர்களாகவே கருதி வருத்தமுற்று அனுமனை விளித்து, 'இன்று
எங்களை இத் துயரத்திலிருந்து காக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டனர்
என்பது.  புந்தி: எண்ணம். ஓர்கலர்: முற்றெச்சம்.  அல் - எதிர்மறை
இடைநிலை.                                                    29