4551.பன்னிரண்டு யோசனை
      படர்ந்த மெய்யினன்,
மின் இரண்டு அனைய
      குண்டலங்கள் வில் இட,
துன் இருள் தொலைந்திட,
      துரிதத்து ஏகினான் -
பொன் நெடுங் கிரி
      எனப் பொலிந்த தோளினான்.

     நெடும் பொன்கிரி என - உயர்ந்த மேருமலைபோல; பொலிந்த
தோளினான் -
விளங்கும் தோள்களையுடைய அனுமான்; பன்னி
ரண்டு யோசனை -
பன்னிரண்டு யோசனை தூரம்; படர்ந்த மெய்யினன் -
வளர்ந்த உடலையுடையவனாய்; மின் இரண்டு அனைய - (தன் காதுகளில்
அணிந்துள்ள) இரண்டு மின்னற்கொடி போன்று; குண்டலங்கள் வில் இட -
குண்டலங்கள் ஒளியை வீசுவதால்; துன் இருள் தொலைந்திட - அடர்ந்த
இருள் அகன்றொழிய; துரிதத்து ஏகி னான் - விரைவாகச் சென்றான்.

     அனுமன் பேருருவமெடுத்துத் தன் குண்டலங்கள் விட்டுவிட்டு ஒளி
வீசுவதால் இடையிடையே இருள் விலகிச் செல்ல, அந்தக் குகையின்
உட்புறத்தில் சென்றான் என்பது.  அனுமன் நினைத்த உருவம் கொள்ளும்
ஆற்றல் வாய்ந்தவன்; எதிர்ப்பட்டவர்களையும் கொடிய விலங்குகளையும்
அச்சுறுத்துவதற்காக அனுமன் இந்தப் பேருருவைக் கொண்டான் என்பது
குறிப்பு.  'அனுமன் நிறமும் பொன்னிறம், வடிவும் பெரிது' என்பது கொண்டு
மேருமலையை உவமையாக்கினார்.                                 31