வானரர் அழகிய நகர் காணுதல் 4552. | கண்டனர், கடி நகர்; கமலத்து ஒண் கதிர் - மண்டலம் மறைந்து உறைந்தனைய மாண்பது; விண்தலம் நாணுற விளங்குகின்றது; புண்டரிகத்தவள் வதனம் போன்றது; |
கடிநகர் கண்டனர் - (அந்தப் பிலத்தின் உட்புறத்தில்) சிறந்த நகர மொன்றை வானரர் கண்டார்கள்; கமலத்து ஒண்கதிர் மண்டிலம் - தாமரையை மலரச் செய்யும் ஒளி மிக்க கதிர்களையுடைய சூரிய மண்டல மானது; மறைந்து உறைந்து அனைய மாண்பது - அந்த இடத்து வந்து மறைந்து தங்கினாற் போன்ற பெருமை வாய்ந்தது; விண்தலம் நாண் உற - வானத்திலுள்ள சொர்க்கலோகமும் வெட்கப்படுமாறு; விளங்குகின்றது - (அதைவிடச் சிறப்பாக) ஒளிபெற்று விளங்குவது; புண்டரிகத்தவள் வதனம் போன்றது - செந்தாமரை மலரில் வாழ்பவளான திருமகளின் முகத்தையொத்து விளங்குவது. பிலத்துள் இருந்த அந்த நகரம் மிகுந்த ஒளி பெற்றமையால் மறைந்துள்ள ஒரு சூரியமண்டலம் போலவும், செல்வச் சிறப்பாலும், பொன்னிறமான பொருள்களையுடைமையாலும் சுவர்க்க லோகமும் நாணுமாறு பொலிவு பெற்றும், மிக்க அழகுள்ளமையால் இலக்குமியின் முகத்தையொத்தும் விளங்கியது என்பது. 32 |