4553. | கற்பகக் கானது; கமலக் காடது; பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது; அற்புதம் அமரரும் எய்தலாவது; சிற்பமும், மயன் மனம் வருந்திச் செய்தது; |
கற்பகக் கானது - (அந்த நகரம்) கற்பகம் போன்ற மரங்களையுடையது; கமலக் காடது - (தாமரை மலர்களையுடைய) நீர்நிலையையுடையது; பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது - பொன்னிறமான உயர்ந்த கோபுரங்களையுடைய மதில்கள் அமையப் பெற்றது; அமரரும் அற்புதம் எய்தல் ஆவது - தேவர்களும் (கண்டு) வியப்படையக் கூடியது; சிற்பமும் - சிற்ப வேலைகளும்; மயன் மனம் வருந்திச் செய்தது - மயன் என்னும் அசுரத் தச்சன் (பலநாள்) மனம் வருந்தித் துன்பப்பட்டு அமைத்தது. இந்த நகரம் பொன்மயமான மரங்களையுடையதென்பதும், பொன்னுலுகில் வாழும் தேவர்களும் கண்டு வியப்படையுமாறு தோற்றச் சிறப்புடையதென்பதும், அசுர சிற்பியான மயனால் அமைக்கப்பட்டதென்பதும் இதிற் குறிக்கப் பெற்றுள்ளன. எல்லாவற்றையும் எளிதில் நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய மயன் என்னும் அசுரத் தச்சனும் பல நாட்கள் மனத்தால் எண்ணிச் சிந்தித்துச் செய்யப் பெற்றது என்று அந்த நகரத்தின் அருமையும், பெருமையும் கூறினார். 33 |