4554. இந்திரன் நகரமும் இணை இலாதது;
மந்திர மணியினின், பொன்னின், மண்ணினில்,
அந்தரத்து எழு சுடர்அவை இன்று ஆயினும்,
உந்த அரும் இருள் துரந்து, ஒளிர நிற்பது;

     இந்திரன் நகரமும் - (இன்னும் அந்த மாநகரம்) இந்திரன் நகரமாகிய
அமராவதியும்; இணை இலாதது - தனக்கு இணையாகப் பெறாத
தகுதியுடையது; அந்தரத்து எழு சுடர் அவை - வானத்தில் உதிக்கிற
கதிரவன், சந்திரன் என்ற இரண்டு சுடர்களும்; இன்றாயினும் - (அங்கே)
தோன்றவில்லை யென்றாலும்; மந்திர மணியினின் - (அந்த நகரத்தின்)
மாளிகைகளில் பதிக்கப் பெற்ற மாணிக்கங்களினாலும்; பொன்னின் -
பொன்னாலும்; உந்த அரும் இருள் - நீக்குவதற்கு அரிய பேரிருளையும்;
துரந்து ஒளிர நிற்பது -
அகற்றி ஒளி விளங்கச் செய்வது.

     அந்தப் பிலத்தின் உட்புறத்திலுள்ள அந்த நகரம் சூரிய சந்திரர்களின்
ஒளியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் தன்னிடம் நிரம்பியுள்ள
மாளிகை இரத்தினங்களாலும், பொன்னாலும் காரிருளையொழித்து விளங்கும்
என்பது. மந்திரம் : அரண்மனை.                                 34