4555. | புவி புகழ் சென்னி, பேர் அமலன், தோள் புகழ் கவிகள்தம் மனை என, கனக ராசியும், சவியுடைத் தூசும், மென் சாந்தும், மாலையும், அவிர் இழைக் குப்பையும், அளவு இலாதது; |
புவி புகழ் சென்னி - (மேலும் அந்த நகரம்) உலகத்தவரால் பெரிதும் புகழப்படுகின்ற குலோத்துங்க சோழனாகிய; பேர் அமலன் தோள் புகழ் - பெருமையுள்ள குற்றமற்ற அரசனது தோள்வலிமையைப் புகழ்ந்து பாடிய; கவிகள் தம் மனை என - கவிஞர்களின் வீடுகள் போல; கனக ராசியும் - பொற் குவியலும்; சவியுடைத் தூசும் - ஒளி மிக்க பொன்னாடைகளும்; மென் சாந்தும் - மென்மையான கலவைச் சந்தனமும்; மாலையும் - மலர் மாலைகளும்; அவிர் இழைக்குப்பையும் - ஒளிவிட்டு விளங்கும் அணிகலன்களின் குவியல்களும்; அளவு இலாதது - அளவில்லாதபடி நிறையப் பெற்றது. குலோத்துங்க சோழன் தன்னை நாடி வந்து பாடுகின்ற கவிஞர்களுக்குப் பொற்குவியல் முதலியன கணக்கின்றிக் கொடுக்கும் வன்மையுடையவன் என்பதைக் கம்பர் செய்ந்நன்றியுணர்வால் குறித்தார் என்பது சவி: ஒளி. தூசு: ஆடை. இழை. அணிகலன். இழைத்துச் செய்யப்படுவது - காரணக் குறி. இங்கே சோழனது பெருமை உவமான முகத்தால் பாராட்டியுரைக்கப் பெற்றுள்ளது. தம்மைப் புரந்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே நினைந்து பாராட்டுவது போலச் சோழ மன்னனையும் இங்கே நினைந்து போற்றுகிறார் கம்பர். 35 |