4557. அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்,
தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும்,
இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன
கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல கொட்பது;

     அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் - (அந்த நகர்)
அமிழ்தத்தைப் போன்ற சோறு முதலிய உணவுப் பொருள்களும்; தமிழ் நிகர்
நறவமும் -
தமிழ்மொழியையொத்த இனிய தேனும்; தனித்தண் தேறலும் -
ஒப்பற்ற குளிர்ந்த மதுவும்; இமிழ் கனிப் பிறக்கமும் - இனிய பழங்களின்
திரட்சியும்; இன்னன பிறவும் - இவை போன்ற பிற உணவுப் பொருள்களும்;
கமழ்வு உறத் துவன்றிய -
மணம் வீசுமாறு நிறைந்துள்ள; கணக்கு இல்
கொட்பது -
எல்லையற்ற பெருமை வாய்ந்தது.

     உண்டு களித்தற்கு இனிய பலவகைப் பண்டங்களும் நிறைந்துள்ளது
அந்த நகரம் என்பது.  'தமிழ் நிகர் நறவமும்' என்ற தொடரால் ஆசிரியரின்
மொழிப் பற்றினையுணரலாம்; தொடர்பு கொண்டாரின் அறிவையும்
உணர்வையும் கவர்ந்து கொள்ளை கொள்ளுதல் பொதுப்பண்பு.  கொட்பு:
பெருமை; பிறக்கம்: திரட்சி.(மலை-) இலக்கணை.                   37