கலிவிருத்தம் (வேறுசந்தம்) 4558. | கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்; 'இந் நகரம் ஆம், இகல் இராவணனது ஊர்' என்று, உன்னி உரையாடினர்; உவந்தனர்; வியந்தார்; பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார். |
அன்னது - (அனுமன் முதலிய வானர வீரர்கள்) அத்தன்மை வாய்ந்த; கன்னி நெடு மா நகரம் - என்றும் அழிவில்லாத மிகப் பெரிய நகரத்தை; எதிர் கண்டார் - கண்ணெதிரே கண்டவர்களாய்; இந்நகர் - இந்த நகரமானது; இகல் இராவணனது - பகைமையையுடைய இராவணனது; ஊர்ஆம் என்று உன்னி - நகரமாகுமென்ற மனத்தில் நினைந்து; உரையாடினர்- தமக்குள் பேசிக்கொண்டு; உவந்தனர் வியந்தார் - மகிழ்ச்சியும் வியப்பும்ஒரே சமயத்தில் அடைந்தவர்களாய்; பொன்னின் நெடுவாயில் அதன் ஊடு- பொன் மயமான நீண்டு அகன்ற அந்த நகரத்து வாயிலில்; இனிது புக்கார்- இனிதாக நுழைந்து சென்றார்கள். அந்த நகரத்தை வானர வீரர் கண்டதும் இராவணனது இலங்கையென்று நினைத்து உடனே சீதையைக் காணலாமென்ற மகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தார்கள் என்பது. கன்னி: அழிவின்மை. கண்டார், உரையாடினர், வியந்தார் -முற்றெச்சங்கள். 38 |