மனிதர் எவரையும் காணாது திகைத்தல் 4560. | வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும் காவும் உள; காவி விழியார்கள் மொழி என்னக் கூவும் இள மென் குயில்கள், பூவை, கிளி, கோலத் தூவி மட அன்னம், உள; தோகையர்கள் இல்லை. |
வாவி உள - (அந்த நகரத்தில்) நடை வாவிகள் உள்ளன; பொய்கை உள - தடாகங்கள் உள்ளன; வாச மலர் நாறும் காவும் உள - நறுமணம் கமழும் மலர்களையுடைய சோலைகளும் உள்ளன; காவி விழியார்கள் - கருங்குவளை மலர் போன்ற கண்களையுடைய மாதர்களின்; மொழி என்னக் கூவும் - இனிய மழலை போலக் கூவுகின்ற; இள மென்குயில்கள் - இளமையான மென்மை வாய்ந்த குயில்களும்; பூவை- நாகணவாய்ப்பறவைகளும்; கிளி - கிளிகளும்; கோலத்தூவி மட அன்னம்- அழகான சிறகுகளையுடைய இளமை வாய்ந்த அன்னப் பறவைகளும்; உள- உள்ளன; தோகையர்கள் இல்லை - (ஆனால்) மகளிர் மட்டும் (அங்கே)இல்லை. மகளிர் புனல் விளையாட்டுக்கு வேண்டிய வாவியும் பொய்கையும் பூக்கொய்து விளையாடிப் பூஞ்சோலைகளும் பொழுதை இனிதே கழிக்க உதவும் குயில் முதலிய பறவைகளும் அங்கே நிரம்பியிருந்தாலும் அவற்றைக் கண்டு மகிழ்வதற்கும் அனுபவித்துத் திளைப்பதற்கும் உரிய மகளிர்மட்டும் காணப்பெறவில்லையே என்ற இரக்கக் குறிப்பு உடையது இப்பாடல். தோகையர்: உவமையாகு பெயர். 40 |