4562. | இறந்திலம்; இதற்கு உரியது எண்ணுகிலம்; ஏதும் மறந்திலம்; அயிர்ப்பினொடு இமைப்பு உள; மயக்கம் பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை இன்றால்; திறம் தெரிவது என்?' என இசைத்தனர், திசைத்தார். |
இறந்திலம் - (நாம் விண்ணுலகையடைந்து விட்டோமென்றால்) நாம் சாகவில்லையே; இதற்கு உரியது எண்ணுகிலம் - இந்த வானுலகை அடைவதற்குரிய வழிகளையும் கருதினோம் இல்லையே; ஏதும் மறந்திலம் - முன்பு நிகழ்ந்த எதனையும் மறக்கவுமில்லையே; அயிர்ப் பினொடு இமைப்பு உள - ஐயப்படுதலும் இமைப்பதும் நம்மிடம் உள் ளனவே; மயக்கம் பிறந்தவர் - மயக்கமடைந்தவர்கள்; செயற்கு உரிய செய்தல் - செய்வதற்குரிய தவறான செயலை; இன்று - இப்பொழுது நாம் செய்தல்; பிழை - பிழையாகும்; திறம் தெரிவது என் - (நமக்கு நேர்ந்துள்ள) நிலையைக் குறித்து எண்ணித் தெளிவது எவ்வாறு? என் இசைத்தனர் - என்று (வானர வீரர்கள்) தமக்குள் கூறிக் கொண்டவர்களாய்; திசைத்தார் - மனம் மயங்கி நின்றார்கள். சுவர்க்கமடைந்தவர்களாகத் தம்மை கருதிய வானரவீரர்கள், உடலோடு இருப்பதாலும், சுவர்க்கம் புகுவதற்குரிய வழிகளைச் செய்யாமையாலும், சீதையைத் தேடுதல் முதலான முன்னைய எண்ணங்கள் தொடர்ச்சியாக உண்டாவதனாலும் தெளிவில்லாமல் இருத்தலும் கண்ணிமைத்தலும் மதி மயக்கம் தமக்கு நேராமையாலும் தாம் சொர்க்கத்தையடையவில்லையெனத் துணிந்தனர் என்பது. இசைத்தனர் :முற்றெச்சம். 42 |