சாம்பன் கலக்கம்

4563.சாம்பன் அவன் ஒன்று
      உரைசெய்வான், 'எழு சலத்தால்,
காம்பு அனைய தோளியை
      ஒளித்த படு கள்வன்,
நாம் புக அமைத்த பொறி
      நன்று; முடிவு இன்றால்;
ஏம்பல் இனி மேலை
      விதியால் முடியும்' என்றான்.

     சாம்பன் அவன் - (அப்பொழுது வீரர்களைப் பார்த்து) சாம்பவான்
என்ற கரடிகளுக்கு அரசன்; ஒன்று உரை செய்வான் - ஒன்று சொல்லத்
தொடங்கினான்; எழு சலத்தால் - (தன்னிடம் இயல்பாகத்)
தோன்றியுள்ள வஞ்சனையால்; காம்பு அனைய தோளியை - இள
மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய சீதையை; ஒளித்த - எடுத்துச்
சென்று மறைத்து வைத்த; படு கள்வன் - பெருந் திருடனான இராவணன்;
நாம் புக அமைத்த -
(சீதையைத் தேடி வரும்) நாம் எல்லோரும்
அகப்பட்டுத் தவிக்குமாறு செய்துவைத்த; பொறி நன்று - சூழ்ச்சி
நன்றாயிருக்கிறது; முடிவு இன்று - (இதற்கு) ஒரு முடிவுமில்லை; ஏம்பல் -
(நமக்குள்ள) ஊக்கமும்; இனி மேலை விதியால் முடியும் - இனிமேல்
முற்பிறப்பில் செய்த தீவினையால் நீங்கிவிடும்; என்றான் - என்று வருந்திக்
கூறினான்.

     'சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் அச்சீதையைத் தேடிவருபவர்
தன்னிடம் வராதபடி வஞ்சனையால் செய்த குழியாகும் இது; நாம் இதில்
சிக்கிக் கொண்டமையால் இனி நமக்கு உய்வில்லை; இதில் அழிந்து ஒழிவதே
விதி' என்றான் சாம்பான்.  சலம்: வஞ்சனை. படு கள்வன்: மிகுதியான திறனும்
கொடுமையும் வாய்ந்த திருடன்.  அறிவு இங்கே சூழ்ச்சி என்ற கருத்தில்
வந்தது.                                                     43