பில நகரின் நடுவில் சுயம்பிரபை

4565. மற்றவரும் மற்று அது
      மனக் கொள வலித்தார்;
உற்றனர், புரத்தின் இடை;
      ஒண் சுடரினுள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு
      நண்ணி, ஒளி பெற்ற
கற்றை விரி பொன்
      சடையினாளை எதிர் கண்டார்.

     மற்றவரும் - (அங்கதன் முதலிய) மற்றை வானர வீரர்களும்; அது
மனக் கொள -
(அனுமன் கூறிய) அந்தச் சொல் மனத்தில் பதியவே;
வலித்தார் -
(அவ்வாறே செய்ய) உறுதி கொண்டார்கள்; புரத்தின் இடை
உற்றனர் -
(யாவரும்) அந்த நகரத்தினிடையே சென்று; ஒண் சுடரினுள் -
மிக்க ஒளியையுடைய (அந்நகரின்) நடுவில்; நல்தவம் அனைத்தும் - சிறந்த
தவம் முழுவதும்; ஓர் உரு நண்ணி - ஒரு பெண்ணுருவம் பெற்றாற்போல;
ஒளி பெற்ற -
ஒளி நிறைந்த; கற்றை விரி பொன் சடையினாளை -
தொகுதியயக விரிந்த அழகிய சடையையுடையவளான சுயம்பிரபையை; எதிர்
கண்டார் -
கண்முன்னே கண்டார்கள்.

     மற்று : அசை. அந்த நகரத்தின் இடையில் தவம் ஓர் உருவம்
எடுத்துவந்தாற் போன்ற சுயம்பிரபையை வானரவீரர்கள் கண்டனர் என்பது. 45