4566.மருங்கு அலச வற்கலை
      வரிந்து, வரி வாளம்
பொரும், கலசம் ஒக்கும், முலை
      மாசு புடை பூசி,
பெருங் கலை மதித் திரு
      முகத்த பிறழ் செங் கேழ்க்
கருங் கயல்களின் பிறழ் கண்
      மூக்கின் நுதி காண,

     மருங்கு அலச வற்கலை வரிந்து - இடையிலே அலையுமாறு மர
வுரியைக் கட்டி; வரிவாளம் பொரும் - இரேகைகளையுடைய சக்கரவாகப்
பறவையைப் போன்றனவும்; கலசம் ஒக்கும் - பொற்கலசங்களை
ஒப்பனவுமான; முலை புடை மாசு பூசி - முலைகளின் மேல் அழுக்குப்
படியப்பெற்றும்; பெருங் கலைமதி திருமுகத்த - பெருமை மிக்க பதினாறு
கலைகளும் நிரம்பிய முழுமதியை யொத்த அழகிய முகத்தில்; பிறழ்
செங்கேழ் -
பிறழுகின்ற செந்நிறத்தையுடையனவும்; கருங்கயல்களின்
பிறழ்-
கருமையான கெண்டை மீன்களைப் போலப் பிறழ்வனவுமான;
கண் மூக்கின் நுதி காண -
தன் விழிகள் இரண்டும் மூக்கின் நுனியை
நோக்கியவாறு இருக்கவும்.

     சுயம்பிரபை மரவுரி தரித்து நீராடவும் செய்யாமல் தவத்திலேயே
மனத்தைச் செலுத்தியிருந்தமையால் முலைகளில் அழுக்குப் படியத் தன்
கண்களின் பார்வையை மூக்கின் நுனியிலே செலுத்தியிருந்தாள் என்பது.

     வற்கலை - பூர்சமென்னும் மரத்திலிருந்து உரித்தெடுக்கப்படும் மெல்லிய
பட்டையான ஆடை. இப்பாடலிலுள்ள வரிந்து, பூசி, நாண என்ற
வினையெச்சங்களும் அடுத்த மூன்று பாடல்களின் வினையெச்சங்களும்  50
ஆம் பாடலில் வரும் 'இருந்தனள்' என்ற வினை கொண்டு முடியும்.

     வரிதல் : இறுகவுடுத்தல்.  வானம்: சக்கரவாளம் என்னும் பறவை;
உருண்டை வடிவால் முலைகளுக்கு உவமை.                         46