4571.'எக் குறியொடு எக் குணம்
      எடுத்து இவண் உரைக்கேன்?
இக் குறியுடைக் கொடி
     இராமன் மனையாளோ?
அக்கு வடம், முத்தமணி
      ஆரம்அதன் நேர் நின்று
ஒக்கும்எனின், ஒக்கும்' என,
      மாருதி உரைத்தான்.

     மாருதி - அனுமன் (அந்த வீரர்களை நோக்கி); எக்குறியொடு
எக்குணம் -
(சீதைக்குரிய உறுப்பிலக்கணங்களிலும் குணங்களிலும்) எந்த
அடையாளத்தை அல்லது எந்தக் குணத்தை; இவண் எடுத்து இசைக்கேன் -
இவளிடம் இருப்பதாக எடுத்துச் சொல்வேன்? இக்குறி
யுடைக்கொடி -
இத்தன்மையுடைய கொடிபோன்ற இப்பெண்; இராமன்
மனையாளோ -
இராமன் மனைவியாவாளோ? (ஆகமாட்டாள்); அக்கு
வடம்-
எலும்பு மாலையானது; முத்த மணி ஆரம் - (நவமணிகளில்
ஒன்றான)முத்தினால் ஆகிய மாலையோடு; அதன் நேர் நின்று ஒக்கும்
எனின் -
நேராக இருந்து உவமையாகுமானால்; ஒக்கும் - (இவளும்
அச்சீதையை)ஒத்திருப்பாள்; என உரைத்தான் - என்று கூறினான்.

     இராமன் தன்னிடம் கூறிய சீதையின் குணம், குறிகள் ஒன்றும் இவளிடம்
இல்லை; ஆதலால், இவள் சீதையில்லையென அனுமன் துணிந்து கூறினான்
என்பது.  எலும்பு மாலைக்கும், முத்து மாலைக்கும் எந்த அளவு
வேறுபாடுண்டோ, அந்த அளவு வேறுபாடு இவளுக்கும் சீதைக்கும்
உண்டென்பது.  அக்கு வடம்: சங்கு மணி மாலை என்றும் கொள்ளலாம்.
கொடி: உவமையாகுபெயர். இந்தப் பெண்ணும் சீதையும் ஒப்பாகார் என்பதற்கு
அக்குமாலையும் முத்துமாலையும் ஒன்றையொன்று ஒக்குமென்று கூறியதால்
பொய்த் தற்குறிப்பணி.                               51