4573.'வேதனை அரக்கர் ஒரு
      மாயை விளைவித்தார்;
சீதையை ஒளித்தனர்; மறைத்த
      புரை தேர்வுற்று
ஏதம் இல் அறத்
      துறை நிறுத்திய இராமன்
தூதர்; உலகில் திரிதும்'
      என்னும் உரை சொன்னார்.

     வேதனை அரக்கர் - (உலகத்தார்க்குத்) துன்பமே தரும் அரக்கர்கள்;
ஒரு மாயை விளைவித்தார் -
ஒரு வஞ்சகச் செயலைச் செய்தனர்; சீதையை
ஒளித்தனர் -
சீதையை எடுத்துச் சென்று மறைத்துவிட்டார்கள்; ஏதம் இல் -
குற்றம் நீங்கிய; அறத்துறை நிறுத்திய - தரும நெறியை நிலைபெறச் செய்த;
இராமன் தூதர் -
இராமன் தூதுவர்கள் நாங்கள்; மறைத்த புரை தேர்வுற்று
-
(அந்த அரக்கர்கள் சீதையை) ஒளித்து வைத்துள்ள மறைவிடங்களைத்
தேடத்தொடங்கி; உலகில் திரிதும் - உலகில் அலைந்து திரிகின்றோம்;
என்னும் -
என்கின்ற; உரை சொன்னார் - மறுமொழியைக் கூறினார்.

     புரை: மறைவான உறைவிடம்.                                 53