சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல் 4576. | கேட்டு, அவளும், 'என்னுடைய கேடு இல் தவம் இன்னே காட்டியது வீடு!' என விரும்பி, நனி கால் நீர் ஆட்டி, அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு ஊட்டி, மனன் உள் குளிர, இன் உரை உரைத்தான். |
கேட்டு - (அனுமன் கூறிய இராமனது வரலாறு முழுவதும்) கேட்டு; அவளும் - அந்தச் சுயம்பிரபையும்; என்னுடைய கேடுஇல் தவம் - நான் செய்த கெடுதல் இல்லாத தவம்; இன்னே வீடு காட்டியது - இப்பொழுதுதான் சாப நீக்கத்தை உண்டாக்கியது; என - என்று சொல்லி; விரும்பி - அந்த வானரவீரரிடம் அன்பு பூண்டு; கால் நீர் நனி ஆட்டி - அவர்களின் கால்களை நீரால் நன்கு கழுவி; அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் - தேவாமிர்தம் போன்ற சுவையுடைய இனிய உணவை; அன்போடு ஊட்டி - அன்புடன் உண்ணச் செய்து; மனன் உள் குளிர - (அவர்களது) உள்ளம் குளிரும்படி; இன் உரை உரைத்தாள் - இனிய சொற்களைச் சொன்னாள். சுயம்பிரபை அவ் வானரர்களின் காலை நீராட்டி அமுதூட்டினாள் என்பது. விருந்தினரை வரவேற்று அவர்களைத் தெய்வமெனப் பேணுதற்குச் செய்யும் சடங்கு இது. அமிழ்து போன்று இனிய அறுசுவையுண்டியென்பார் இன்னடிசில் என்றார். மோப்பக் குழையும் (90) என்ற திருக்குறள் உரைவிளக்கத்தில் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும் அவைபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்று என்பர் பரிமேலழகர். சுயம்பிரபையின் விருந்தோம்பற் பண்பினைப் பரிமேலழகர் உரையுடன் ஒப்பிட்டுணரலாம். 56 |